கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் வைபவம் இவ்வாண்டும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மகாபாரதப் போரில் வெற்றி பெற அரவான் என்ற இளவரசனை பஞ்சபாண்டவர்கள் பலி கொடுத்த வரலாற்றை நினைவு கூரும் விதமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அரவானை கணவனாக ஏற்றுக் கொள்ளும் அடையாளமாக திருநங்கைகள் மணப்பெண் கோலத்தில் அலங்கரித்து, கோயில் பூசாரியின் கையால் தாலி கட்டிக் கொள்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்று வரும் தாலி கட்டும் நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டு, வளையல், பூமாலை அணிந்து, புதிய உடையில் மணப்பெண் அலங்காரத்தில் அரவானை கணவனாக ஏற்று தாலி கட்டிக் கொண்டு வருகின்றனர்.
தாலி கட்டும் நிகழ்வுக்குப் பிறகு, திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி பாடி ஆனந்தமாகக் கொண்டாடுகின்றனர். இதனைத் தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு தேரோட்டமும், காலை 9 மணிக்கு திருநங்கைகள் தாலி துறக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மருத்துவத் துறையினர் கிராமத்தில் இரண்டு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாம்களை அமைத்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை சார்பில் கிராமம் முழுவதும் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டி.ஐ.ஜி அருளரசு தலைமையில் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆன்மிகமும் சமூக ஒற்றுமையும் இணையும் இந்த கூவாகம் திருவிழா, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும் திருநங்கைகளையும் ஈர்த்து, தனித்துவமான பாரம்பரிய நிகழ்வாகத் திகழ்கிறது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment